குடிப்பழக்கத்தை விடுமாறு மனைவி கண்டித்ததால் கணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் பகுதியில் வசித்து வந்தவர் சுந்தரமூர்த்தி. இவர் அப்பகுதியில் பஞ்சாயத்து துப்புரவு ஊழியராக பணிபுரிந்து வந்தார். அவருடைய மனைவி சுலோச்சனா. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்த இரண்டு பிள்ளைகளுக்கும் திருமணமாகி அவரவர் குடும்பத்துடன் அருகிலேயே வசித்து வருகின்றனர். சுந்தரமூர்த்திக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அவருடைய மனைவி அவரை அடிக்கடி கண்டித்து வந்துள்ளார். இதனால் அவர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதால் சுந்தரமூர்த்தி வீட்டின் பின்புறத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுந்தர மூர்த்தியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.