திண்டுக்கல்லில் மனைவி பிரிந்த மன வருத்தத்தில் வனச்சரகர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மஞ்சநாயக்கன்பட்டியில் பாலமுருகன் என்பவர் வசித்து வந்தார். இவரது மனைவி பஞ்சவர்ணம். இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். பாலமுருகன் வனச்சரகராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு கணவன், மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த பஞ்சவர்ணம் தனது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதையடுத்து பாலமுருகன் தனது மகன் மற்றும் மகளுடன், தனது அக்காள் பனிமலர் வீட்டில் வசித்து வந்துள்ளார். மேலும் மனைவி பிரிந்ததால் பாலமுருகன் மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று குளியலறைக்கு குளிக்கச் சென்ற அவர் வெகு நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் கதவை தட்டி பார்த்துள்ளனர். ஆனால் அவர் திறக்கவில்லை.
பின் சிறிது நேரம் கழித்து கதவை திறந்துள்ளார். அப்போது திடீரென பாலமுருகன் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து பாலமுருகனை அவரது குடும்பத்தினர் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாக கூறியுள்ளனர். இந்த தற்கொலை குறித்து சாணார்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.