ஆயுதப்படை போலீஸ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்திலுள்ள தொட்டியம் பகுதியில் விவசாயியான பாண்டியன் வசித்து வருகிறார். இவருக்கு ஆயுதப் படையில் போலீசாக பணிபுரியும் பிரேமா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 1 மகனும், 1 மகளும் இருக்கின்றனர். இந்த தம்பதிகள் கே.கே நகர் ஆயுதப்படை காவல் குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களது மகன் செய்த சேட்டையால் எரிச்சலடைந்த பிரேமா குழந்தையை கண்டித்துள்ளார்.
இதனால் பாண்டியன் பிரேமாவிடம் கோபப்பட்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. எனவே மனமுடைந்த பிரேமா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைப் பார்த்ததும் பாண்டியன் பிரேமாவை உடனடியாக காப்பாற்றி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். தற்போது பிரேமாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.