காணாமல் போன தனது மனைவி மற்றும் குழந்தைகள் கிடைக்காத விரக்தியில் ஒருவர் காவல் நிலைய வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்திலுள்ள உப்பிலியாபுரம் பகுதியில் ஞானப்பிரகாசம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் லாரியில் கிளீனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சோலை ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு துர்கேஷ், நிதிஷ் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சோலை ஈஸ்வரி தனது மகன்களுடன் காணாமல் போனதால் ஞானப்பிரகாசம் உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தியும் கடந்த ஒரு ஆண்டாக வழக்கில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த ஞானப்பிரகாசம் உப்பிலியபுரம் காவல் நிலையத்திற்கு பின்புறம் சென்று பெட்ரோலை உடல் முழுவதும் ஊற்றி கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து அவரின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி சென்று ஞானப்பிரகாசத்தை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதன் பின் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஞானப்பிரகாசத்திற்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து துறையூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.