கோவையைச் சேர்ந்த பதினொன்றாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கும், கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியில் கல்லூரி படிப்பை படித்து வரும் மாணவன் தயாநிதிக்கும் இடையே முகநூல் மூலமாக பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து மாணவன் மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதில் மாணவி கர்ப்பம் அடைய திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தவே அவரிடம் பேசுவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டார் தயாநிதி. இதனால் மனமுடைந்த மாணவி கடந்த ஜனவரி 2ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதில் மாணவி கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது செல்போன் தொடர்புகளை காவல்துறையினர் சைபர் கிரைம் மூலம் ஆராய்ந்தனர். அதில்,
மாணவி காதலுடன் பேசிய தகவல்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டன. இதையடுத்து மைசூர் சென்ற பெரியநாயக்கன்பாளையம் காவல்துறை அதிகாரிகள் தயாநிதியை சுற்றி வளைத்துப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவர் செய்த தவறை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.