விழுப்புரம் அருகே தங்கை தற்கொலைக்கு காரணமான காதலனை அண்ணன் ஆறு பேர் உதவியுடன் வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் பெரிய கோட்டகுப்பம் பகுதியை அடுத்த மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் ராகவன். இவர் ஹைதராபாத்தில் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் இவர் கோட்டகுப்பத்தை சேர்ந்த அருணா என்ற நர்சிங் வேலை பார்த்து வந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் வீட்டிற்கு தெரிய வர அருணாவின் வீட்டில் பெற்றோர்கள் திருமண ஏற்பாடு செய்தனர். இதனால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டார்.
அருணா தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தை அறிந்த ராகவன் அவரைப் பார்ப்பதற்காக சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இதனை அறிந்த அவரது அண்ணன் 6 பேருடன் சேர்ந்து நேற்றையதினம் ராகவனின் நண்பனின் உதவியுடன் கிழக்கு கடற்கரை சாலைக்கு அவனை வரவழைத்து அங்கு அவரை சரமாரியாக வெட்டி பெற்றோலை ஊற்றி கொளுத்தி விட்டு சென்று விட்டனர்.
பின் இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் கொலையாளிகளை தனிப்படை வைத்து காவல்துறையினர் தேடி வந்தனர். அந்த வகையில் விசாரணை மேற்கொண்டதில்,
கொலை செய்யப்பட்டவரின் காதலி வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டார். மகளின் தற்கொலைக்கு ராகவன் தான் காரணம் என்று பெற்றோர்கள் மகனிடம் கொலை செய்யுமாறு உத்தரவிட்டனர். அதன்படி காதலியின் அண்ணன் அவரது நண்பர்கள் கொலை செய்யப்பட்டவனின் நண்பன் உட்பட 7 பேருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வரவே காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.