ஈரோடு மாவட்டம் கைக்கோளன் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மோகனவேலன். இவர் அதே பகுதியில் நிதி நிறுவனம் ஒன்று நடத்திவந்துள்ளார். இவருக்கு 2016ஆம் ஆண்டு ஈரோட்டில் ஒன்னா நம்பர் லாட்டரி, ஆன்லைன் கிரிக்கெட், ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களை கிளப் வைத்து நடத்திவரும் எல்.எம். மாதேஸ்வரன் என்பவர் அறிமுகமாகியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சூதாட்டத்தில் மிகவும் ஆர்வம்கொண்ட மோகனவேலன், 24 மணி நேரமும் அனைத்து வகை சூதாட்டங்களையும் விளையாடி வந்துள்ளார். இதன் காரணமாக தனது முதலீடு, நகை, ரொக்கப்பணம்,சொத்து ஆகியவற்றை இழந்துள்ளார். பின்னர், அபுதாபியில் ஓட்டுநராக சில மாதங்கள் பணியாற்றிவிட்டு, சொந்த ஊரான ஈரோட்டிற்குத் திரும்பியுள்ளார்.
மீண்டும் அவரை அணுகிய மாது, சூதாட்ட ஆசையை தூண்டிவிட அபிதாபியில் ஈட்டிய வருவாயையும் சூதாடி இழந்துள்ளார். இதனால், சூதாட்ட பேராசையில் தனது சொத்தை இழந்து தான் ஈட்டிய வருவாயையும் இழந்து மன உளைச்சலுக்கு ஆளாகி நேற்றிரவு தூக்க மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
மயக்கமான நிலையிலிருந்த மோகனவேலனை, அவரது நண்பர்கள் மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து பல மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு அவர் உயிருடன் காப்பாற்றப்பட்டார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மோகனவேலன், “ஈரோட்டில் தொடர்ந்து நடைபெற்றுவரும் சூதாட்ட கிளப்பினால் என்னைப் போன்றவர்கள் பலர் குடும்பங்களை இழந்தும் உறவுகளை இழந்தும் சொத்துக்களை இழந்தும் தவித்துவருகின்றனர். ஒன்னா நம்பர் லாட்டரி, ஆன்லைன் கிரிக்கெட், ஆன்லைன் ரம்மி ஆகியவற்றை தடைசெய்திட வேண்டும்.