நீட் தேர்வு காரணமாக மன அழுத்தம் ஏற்பட்டு இரு மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு திட்டமிடப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்பு நேற்று 19 வயது உள்ள மாணவி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதுமுள்ள அரசு அல்லது தனியார் மருத்துவ மற்றும் பல் கல்லூரிகளில் இளங்கலை மருத்துவ படிப்புகள் மற்றும் பல் படிப்புகளைப் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அகில இந்திய அளவிலான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் நடப்பப்படும் இந்த நுழைவுத் தேர்வை கல்வி ஆர்வலர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். வருடம்தோறும் இந்த தேர்வின் காரணமாக மாணவ மாணவிகள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். அந்த வகையில், ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த மாணவி ஒருவர் கடந்த இரண்டு வருடங்களாக நீட் தேர்வுக்காக தனியார் நிறுவனம் ஒன்றில் பயிற்சி எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் இந்தாண்டும் நீட் தேர்வு திட்டமிட்டப்படி செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெறும் என உச்ச நீதிமன்றம் அறிவித்ததை அடுத்து அம்மாணவி தேர்வை எதிர்கொள்ள வேண்டியுள்ளதை உணர்ந்து கடும் அழுத்தத்திற்கு உள்ளாகி இருந்துள்ளார். இதனால், அவர் நேற்று தற்கொலை செய்துகொண்டார். அவரது தந்தை கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் விஜயவாடா காவல் துறையினர், உயிரிழந்த மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவி தற்கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல, தமிழ்நாட்டின் கோவை ஆர்.எஸ் புரம் வெங்கடசாமி சாலை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த மாணவி சுபஸ்ரீ (19) நேற்று மாலை அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. சென்ற 2016ஆம் ஆண்டு நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் 2019ஆம் ஆண்டு மோனிஷா, ரித்துஸ்ரீ, வைஷியா ஆகிய மாணவிகளும் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.