கோடைகாலத்தில் என்னதான் வெயிலில் அலைவதை தவிர்த்தாலும், உடல் உஷ்ணம் அடைவதை தடுக்கவே முடியாது. அதிலும் வெளியில் சென்றே ஆகவேண்டும் என்ற கட்டாயம் நிலை உள்ளவர்களுக்கு சொல்லவே தேவையில்லை.அதனால் கோடையில் தவிர்க்க வேண்டிய சில உணவுகள்..!!
பொதுவாக தட்பவெப்பநிலை மாறிய உடனேயே, நம்முடைய உணவுப் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்வது அவசியம். ஏனென்றால் சில உணவுகள் உடலின் வெப்பநிலையை அதிகரித்து ஆபத்தான நிலைக்கு கொண்டு சென்று விடும். அதுமட்டும் இல்லை வெயில் காலத்தில்,
- அதிக உஷ்ணம்
- சரும பிரச்சனைகள்
- உடல் சோர்ந்து போதல்
- மயக்கம்
- நோய் தொற்றுகள்
- சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை
- உடலில் தண்ணீர் பற்றாக்குறை
போன்ற பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இவை அனைத்தையும் சமாளிக்க நம் உணவில் அதிகம் கவனம் கொள்ள வேண்டும். அதிலும் சிலரது உடல் இயற்கையிலேயே உடல் சூடு அதிகம் உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்கள் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
1.காபி. டீ குடிப்பதை தவிர்த்திடுங்கள்:
காபி, டீ அதிகம் குடிப்பதால் பெப்டிக் அல்சர் ஏற்படும் என்பது மிக சரியான உண்மை. காபியும் உடல் வெப்பத்தை அதிகரிக்கும், உணவுப் பொருள் ஆகும். எனவே இதனை முடிந்தவரை அதிகம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. அதே போன்று அதிக அளவில் குடித்தால், அதில் உள்ள தனிச் என்ற வேதிப்பொருள் உடலில் இரும்பு சத்து சேராமல் தடுக்கும் தன்மை கொண்டது.
ஒரு நாளைக்கு சராசரியாக இரண்டு கப் டீ குடித்தால் போதுமானது. அதற்கு மேல் அடிக்கடி டீ குடிக்க பழகினால் உடல்நலத்திற்கும் மிகுந்த கேடு விளைவிக்கும். உண்மையில் காபி, டீக்கு பதிலாக மாதுளை ஜூஸ், இளநீர், நீராகாரம், லெமன் ஜூஸ், நீர்மோர், ஆரஞ்சு ஜூஸ் போன்ற பானங்களை குடித்தால் உடல் வெப்பம் குளிர்ச்சியாக இருக்கும். கோடைகால நோய்களும் வராது.
2. ஐஸ்வாட்டர்:
பொதுவாக வெயிலால் தாகம் அதிகம் எடுக்கும் பொழுது, ஐஸ் வாட்டர் குடிக்க வேண்டும் போல் இருக்கும். ஆனால் இதுபோன்ற மிகக் குளிர்ந்த தண்ணீர் ரத்தக்குழாய்களை சுருக்கி உடலின் வெப்பத்தை இன்னும் அதிகமாக்கி விடும். அதுமட்டுமில்லை இவை செரிமானத்தை கூட பாதிக்கும். மேலும் சாப்பிடும்பொழுது ஐஸ் வாட்டர் குடித்தால் சாப்பிட்ட உணவு உள்ளே செல்வதில் கடினமாகிவிடும்.
அதேசமயம் இந்த உரை வெப்பநிலை குடல் இயக்கங்களையும் பாதிக்கிறது. இதன் விளைவு மலச்சிக்கல்தான். எனவே ஐஸ் வாட்டர் குடிப்பது தவிர்க்க வேண்டும். இதற்கு பதிலாக மண்பானை தண்ணீர் குடிப்பது மிகவும் நல்லது. உடலையும் குளிர்ச்சியாக வைத்திருக்கும்.
3. ஐஸ் கிரீம்:
ஐஸ் க்ரீம் மற்றும் குளிர்பானங்கள் இந்த இரண்டுமே உடல் வெப்பத்தை அதிகரிக்க கூடியது. இவற்றை சாப்பிட்டால் வாய்க்கு மட்டுமே குளிர்ச்சியாக இருக்குமே தவிர, வயிற்றுக்கு அவை சென்றால் வெப்பத்தை தான் அதிகரிக்கும். எனவே இதற்கு மாற்றுவழி மண்பானை தண்ணீர், நீர்மோர் இவைகள்தான். இவைகள் உடல் வெப்பத்தையும் போக்கி, உடலுக்கு குளிர்ச்சியும் கொடுக்கிறது.
4.எண்ணெயில் வறுத்த பொரித்த உணவுகள்:
வெயில் காலங்களில் எண்ணெயில் வறுத்த பொரித்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் செரிமான கோளாறு, வாயுத்தொல்லை போன்றவை ஏற்படும். மேலும் உடலின் வெப்பத்தையும் அதிகரிக்கும். மேலும் செரிமான பிரச்சனைகள் உள்ளவர்கள் வெயில் காலத்தில் இதுபோன்ற எண்ணெய் உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும்.
5. மாம்பழம்:
மாம்பழம் உடலுக்கு நல்லதுதான். அதேசமயத்தில் இவற்றை அதிகம் சாப்பிட்டால் உடல் வெப்பத்தை அதிகரிக்கும். மேலும் வெப்பத்தை அதிகரித்து உடல் சூடு சம்பந்தமான பிரச்சனைகளை உண்டாக்கும். எனவே அளவாக சாப்பிடுவது நல்லது. இது மட்டுமில்லை மாங்காய், அன்னாசி, பலா போன்ற அனைத்துமே கோடையில் கிடைக்கும் மற்ற பழங்கள். இவற்றையும் அளவுக்கு அதிகமாக சாப்பிடாமல் குறைந்த அளவு சாப்பிடுவது நல்லது.
6. இறைச்சிகள்:
கோடைகாலத்தில் நண்டு, சிக்கன், இறால் போன்ற அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் இவைகள் உடல் சூட்டை கிளப்பி, வயிற்றுப் போக்கை உண்டாக்கும். உடலில் இருந்து நீரை வெளியேற்றிவிடும். மேலும் மட்டன், சிக்கன் பீஸ் இவற்றை எண்ணெயில் பொரிக்காமல் குழம்பு போன்று வைத்து சாப்பிடலாம். முக்கியமாக சாலையோர கடைகளில் கிடைக்கும் பொரித்த இறைச்சி உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும்.
7. பாஸ்ட் புட் என்று சொல்லக்கூடிய துரித உணவுகள்:
இவற்றை அறவே தவிர்ப்பது நல்லது. பர்கர், பீட்சா, ஃப்ரைட் ரைஸ் இவை செரிமான மண்டலத்திற்கு பிரச்சனை கொடுப்பதோடு சில நேரங்களில் அவை ஃபுட் பாய்சனாக ஏற்படும். மேலும் இவைகள் வெப்பத்தை அதிகரிப்பதோடு, இதயம் நுரையீரல் போன்ற முக்கிய உடல் உறுப்புகளை பாதிக்கும். அதே போன்று இது போன்ற உணவுகள் உடலுக்கு அதிக தீமை மட்டுமே கொடுக்கக்கூடியது. சொல்லப்போனால் இந்த உணவுகளை அனைத்து காலங்களிலும் தவிர்ப்பதே நல்லது.
8. பரோட்டா:
மைதா மாவினால் செய்யப்படும் பரோட்டா செரிமானம் ஆவதற்கு நிறைய நேரம் எடுத்துக் கொள்ளும். இதனால் இந்த நேரத்தில் உடல் வெப்பமானது அதிகரிக்கும். மேலும் ஏராளமான ரசாயனங்கள் மற்றும் வேதிப் பொருட்கள் உள்ளதால், மைதா உணவுகளை அதிகம் சாப்பிட்டு வந்தால் இரத்த நாளங்களில் அதிக அளவு கொழுப்பு படிந்து இதய நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். இதில் நார்சத்து என்பது அறவே இல்லை என்பதால், இதை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை உண்டாகும். முக்கியமாக ரத்த சர்க்கரையின் அளவை அதிகப்படுத்தும். உடல் பருமனை அதிகரிக்கும், எனவே எல்லா காலங்களிலும் தவிர்ப்பது நல்லது.