ஜெனீவாவில் இரண்டு நாடுகளுடைய தலைவர்கள் சந்தித்து பேச இருப்பதால் தற்போது உலக அளவில் சுவிட்சர்லாந்து செய்திகள் கவனம் ஈர்த்து வருகிறது.
சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் வருகின்ற 16-ஆம் தேதி நடைபெறவிருக்கும் உச்சிமாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகிய இருவரும் சந்திக்க உள்ளனர். இந்த சந்திப்பானது ஜெனீவாவில் உள்ள பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கட்டிடம் ஒன்றில் நடைபெறவிருக்கிறது. மேலும் அமெரிக்க, ரஷ்ய நாடுகளுக்கு இடையே இதுவரை கருத்து வேறுபாடு இருந்து வந்த நிலையில் இரு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் நேரில் சந்தித்து பேச இருப்பது இதுவே முதல் முறையாகும்.
அமெரிக்க தரப்பிலிருந்து ரஷ்யா மீது சைபர் தாக்குதல், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையிட்டது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையேயான இந்த உச்சி மாநாடு மிகவும் இன்றியமையாத ஒன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது.