சுந்தர் பிச்சை கூகுள் தலைமை செயல் அதிகாரி. ஆயிரம் கண்களில் ஒரு தேடல். ஒற்றைச் சொல்லுக்காக ஆர்ப்பரிக்கும் இளைஞர் கூட்டம். உச்சிமுகர்ந்து கொண்டாடும் இந்த ஒற்றை தமிழர் சுந்தர்பிச்சை. மதுரை மண்ணில் காலூன்றி உலகின் திசைகளுக்கு முகவரியாக மாறியுள்ள இவர் தமிழ் மண்ணுக்கும் தமிழ் மொழிக்கு பெருமை தேடித்தந்த நம்மூர் தமிழர் சுந்தர்பிச்சை. உலகில் உள்ள நம்பர் ஒன் இணையதளங்களின் ஜாம்பவானான கூகுளின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்.
தொலைக்காட்சி கூட இல்லாமல் இரண்டு அறைகள் கொண்ட வீட்டில் வளர்ந்த சுந்தர் பிச்சை இன்று தனது அறிவுத் திறமையால் உலகையே தன்வசப்படுத்தியுள்ளார். சென்னை ஜவஹர் வித்யாலயா பள்ளியில் பத்தாம் வகுப்பும், வனவாணி பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பும் முடிந்த சுந்தர் பிச்சை ஐஐடி கரக்பூரில் உலோகப் பொறியியல் பயின்றார். ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்எஸ் பட்டம் படிக்க உதவித் தொகையுடன் அழைப்பு வந்தது. ஒருபுறம் மகிழ்ச்சியில் திளைத்த சுந்தர் பிச்சையின் குடும்பத்தினருக்கு மறுபுறம் ஒரு பேரிடி காத்திருந்தது.
ஸ்டான்போர்ட் செல்ல விமான கட்டன தொகையை கேட்டதும் அவரது தந்தை ஆடிப் போனார். தன் ஆண்டு வருமானத்தை விமான கட்டணமாகச் செலுத்தவேண்டும் என்ற தகவல் அவரது உறக்கத்தை கெடுத்தது. தன்னைப் போல் தனது மகனின் வாழ்க்கையும் அமையக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த சுந்தர் பிச்சையின் தந்தை ரகுநாத பிச்சை பலர் வாசல் படிகளில் ஏறி இறங்கி கடைசியாக ஆனந்தக்கண்ணீர் பொங்க சுந்தர் பிச்சையை விமானத்தில் ஏற்றி விண்ணில் பறக்க செய்தார். அன்று தொடங்கி இன்றுவரை வாழ்வின் உயரங்களில் பறந்து கொண்டிருக்கிறார் சுந்தர் பிச்சை.
2004-ம் ஆண்டு கூகுளில் இணைந்த அவர் வாடிக்கையாளர் மென்பொருள் தயாரிப்புகளின் தொகுப்பில் முக்கிய பங்கு வகித்து அதன் பயனாக கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றுகிறார். 2013ஆம் ஆண்டு ரூபின் பதவி விலகிய பிறகு ஆண்ட்ராய்டு பிரிவிற்கும் சேர்த்து சுந்தர் பிச்சை தலைவரானார். கூகுள் வரைபடம், ஆய்வு, விளம்பரம், வணிகம், ஆண்ட்ராய்டு, குரோம், உள்கட்டமைப்பு, கூகுள் ஆப்ஸ் ஆகியவற்றின் தலைவராக இருந்த இவர் கூகுள் உறவு நிறுவனங்களின் புதிய கூட்டு நிறுவனமான அல்ஃபாபெட் நிறுவனத்திலும் இவரே முக்கிய பங்காற்றி வருகிறார்.
2008ம் ஆண்டு பிச்சை தலைமையிலான குழு தான் குரோம் பிரவுசரை உருவாக்கியது. கூகுள் நிறுவனத்தில் வருமானத்தைப் பெற்றுத்தரும் கூகுள் தேடல், விளம்பரம், யூடியுப் ஆகியவற்றில் இவரது பங்களிப்பு அதிகம். ஆன்ட்ராய்டு இயங்கு தளமான கிட்கேட் லாலிபாப் வடிவமைப்பிலும் இவரது பங்களிப்பு அசாத்தியமானது. சுந்தர் பிச்சையின் தலைமைப் பண்பு, சிறந்த மேலாண்மை, சக ஊழியர்களுடன் இணக்கமான சூழல் இவையே நம்மூர் தமிழர் சுந்தர் பிச்சையை உலக தமிழனாக அங்கீகரித்துள்ளது.