இளம் வீரர் ரிஷப் பண்ட் உலக கோப்பை இந்திய அணியில் இடம்பிடிக்காதது ஆச்சரியமாக உள்ளது என்று இந்திய முன்னாள் கேப்டன் தெரிவித்துள்ளார்.
2019 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகின்ற மே மாதம் 30-ம் தேதி முதல் தொடங்கி ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா இந்தியா, தென்ஆப்பிரிக்கா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களை தேர்வு செய்வதற்கு ஐ.சி.சி ஏப்ரல் 23 ம் தேதி வரை காலக்கெடு கொடுத்திருந்தது. ஏற்கனவே நியூசிலாந்து அணியும், ஆஸ்திரேலிய அணியும் வீரர்களை தேர்வு செய்து விட்ட நிலையில் நேற்று இந்திய அணி 15 வீரர்களாக யாரை தேர்வு செய்யப்போகிறாரகள் என்று மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ள நிலையில் மும்பையில் நேற்று பிற்பகல் நடைபெற்ற இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வு குழு கூட்டத்தில் வீரர்களை தேர்வு செய்தனர்.
உலக கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள் :
விராட் கோலி (கேப்டன்) , ரோஹித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவன், கே.எல் ராகுல், விஜய் சங்கர், எம்.எஸ் தோனி, கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், யுஸ்வேந்திர சஹல், குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரிட் பும்ரா, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது சமி ஆகியோர் இடம் பிடித்தனர்.
இந்நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் இடம் பெறாதது மிகவும் ஆச்சரியம் அளிப்பதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், ‘ரிஷப் பண்ட் நல்ல திறம்பட செயல்படக்கூடியவர். அவர் பேட்டிங்கில் நல்ல பார்மில் இருக்கிறார். ரிஷப் பண்ட் இந்த ஐ.பி.எல். சீசனில் சிறப்பாக செயல்படுகிறார். அது மட்டுமின்றி அதற்கு முன்னதாக நடைபெற்ற போட்டிகளிலும் அவர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படுவதுடன் விக்கெட் கீப்பிங்கிலும் நல்ல முன்னேற்றம் கண்டு அசத்தி வருகிறார். அப்படி இருக்கும் சூழலில் ரிஷப் பண்டை உலக கோப்பைக்கான இந்திய அணியில் சேர்க்காதது எனக்கு மிகவும் ஆச்சரியம் அளிக்கிறது’ என்றார்.