தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ. 1000 ரொக்கப் பணம் போன்றவைகள் வழங்கப்பட இருக்கிறது. அதன்பிறகு இலவச வேட்டி மற்றும் சேலை குறித்த அறிவிப்புகள் எதுவும் வெளியாகாத நிலையில், எடப்பாடி பழனிச்சாமி இலவச வேட்டி, சேலை வழங்கப்படாவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிக்கை வெளியிட்டு இருந்தார். இது தமிழக மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது இலவச வேட்டி, சேலை குறித்த தகவலை அமைச்சராக ஆர். காந்தி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, பொங்கல் பண்டிகையின் போது இலவச வேட்டி மற்றும் சேலைகள் வழங்கப்படாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று எடப்பாடி வெளியிட்டிருக்கும் அறிக்கை அர்த்தம் அற்றது. தமிழக முதல்வர் ஸ்டாலின் பொங்கலுக்கு வழங்கப்பட வேண்டிய வேட்டி, சேலைகளின் தரம், வண்ணங்கள் போன்றவற்றை ஏற்கனவே ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளார்.
அதன் பிறகு இலவச வேட்டி, சேலை வழங்குவது தொடர்பாக ஆய்வுக்கூட்டமும் நடத்தப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான செய்திகளும் பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் வந்துள்ளது. ஆனால் இந்த செய்திகளை எல்லாம் எடப்பாடி பழனிச்சாமி பார்த்தாரா என்று தெரியவில்லை. மனம் போன போக்கில் தேவையில்லாமல் அறிக்கையை வெளியிட்டு மக்களை குழப்பிக் கொண்டிருக்கிறார். தமிழகத்தில் 1 கோடியே 79 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கடந்த வருடத்தை போல் பொங்கல் பண்டிகையின் போது கண்டிப்பாக இலவச வேட்டி மற்றும் சேலை வழங்கப்படும் என்று என்று கூறியுள்ளார்.