காங்கிரஸ் மூத்தத் தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரம் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “அஸ்ஸாமில் நடைபெறும் வன்முறைக்குக் காரணமே குடியுரிமை திருத்தச் சட்டம்தான். இந்தியாவின் அடிப்படை கொள்கைகளின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. நாட்டில் பிறக்கும் 40 விழுக்காட்டினர் குறித்து பதிவு செய்யப்படுவதில்லை. சட்டத்தில் சில அம்சங்கள் சேர்க்கப்படவில்லை. அதனையே நாங்கள் எதிர்க்கிறோம்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான எதிர்ப்பே தேசிய குடிமக்கள் பதிவேட்டின் எதிர்ப்பாக மாறியது. தேசிய குடிமக்கள் பதிவேட்டின் எதிர்ப்பே தேசிய மக்கள் தொகைக்கு எதிரான எதிர்ப்பாக மாறியது. சட்டப்பூர்வமாக குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்போம். விரைவில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை உச்ச நீதிமன்றம் நீக்கும். தேசிய மக்கள் தொகை பதிவேட்டை அரசியல் ரீதியாக எதிர்க்க வேண்டும். அதற்கு எதிராகப் போராடுபவர்களின் உதவியோடு சட்டத்தைத் திரும்பப் பெற செய்வோம்” என்றார்.