சாலை விதிகளை மீறி வேகமாக வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்துவதுடன் உயிரிழப்புக்கு காரணமாக உள்ளவர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் தண்டனை கொடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாலை விதிகளை மீறுவோர் மீது ஒரே சமயத்தில் மோட்டார் வாகன சட்டம் இந்திய தண்டனை சட்டம் ஆகிய இரு பிரிவிலும் வழக்கு தொடர முடியாது என்று கௌகாத்தி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதனை எதிர்த்து அருணாச்சலப் பிரதேசம் திரிபுரா ஆகிய மாநிலங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் மல்ஹோத்ரா, சஞ்சீவ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் சாலை விபத்துகள் மீதான வழக்குகளில் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகளின் கீழ் தண்டனை வழங்கலாம் என்று உத்தரவிட்டனர். இதற்கு முன்பாக சாலை விதிகளை மீறுவோருக்கு மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் அதிகபட்சம் ஆறு மாதங்கள் மட்டுமே தண்டனை விதிக்க முடியும் என்ற நிலையில், தற்பொழுது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் குற்றச்செயல்கள் என்ற அடிப்படையில் 10 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.