Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிர எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தைக் கேட்டு வழக்கை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம்..!!

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க சமர்ப்பிக்கப்பட்ட ஆதரவு கடிதத்தை அம்மாநில ஆளுநர் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கக் கோரி, உத்தரவிட்டு வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் நாளை ஒத்திவைத்துள்ளது.

மகாராஷ்டிராவில் யாரும் எதிர்பாராத விதமாக தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான அரசு ஆட்சி அமைத்து. முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவியேற்ற நிலையில், இந்த விவகாரத்தை சிவசேனா உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது. மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அதிகாலை அவரச அவரசமாக நீக்கப்பட்டு, திடீரென ஆட்சி அமைத்தது சட்டவிரோதமானது எனக் கோரி வழக்கு தொடர்ந்துள்ளது.

வழக்கு தொடர்பாக சிவசேனா சார்பில் ஆஜரான கபில் சிபில், ‘மகாராஷ்டிராவில் அரங்கேறியுள்ளது ஜனநாயக விரோதமான செயல், பெரும்பான்மை உள்ள சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் கட்சிகளைத் தவிர்த்து பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அனுமதித்துள்ளார்’ என வாதத்தை முன்வைத்தார். இதைத் தொடர்ந்து அரசு உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டுமென வாதத்தைத் தெரிவித்தார்.

காங்கிரஸ் சார்பில் ஆஜரான அபிஷேக் மனு சிங்வி, ‘ துணை முதலமைச்சராக பதவியேற்ற அஜித் பவார் தந்த தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆதரவு கடிதத்தை ஆளுநர் சரி பார்க்கவில்லை எனவும், பெரும்பான்மை குறித்த முடிவை ஆளுநர் எவ்வாறு முடிவு செய்தார்’ எனக் கேள்வி எழுப்பினார். ஆளுநர் மேற்கொண்டது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல், எம்.எல்.ஏக்களின் குதிரை பேரத்தைத் தடுக்க நம்பிக்கை வாக்கெடுப்பை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

பாஜக சார்பில் ஆஜரான முகுல் ரோத்தகி, ’17 நாட்களாகியும் சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் ஆகிய கட்சிகளால் ஆட்சியமைக்க முடியவில்லை. எனவே பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியமைக்க உரிமை கோரியதும் ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஆளுநரின் இம்முடிவில் நீதித்துறை தலையிட முடியாது’ என வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘பெரும்பான்மைக்கான ஆதரவு கடிதத்தை ஆளுநர் உச்ச நீதிமன்றத்தில் நாளை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளை ஒத்தி வைத்துள்ளனர். நாளை காலை 10.30 மணிக்கு மீண்டும் வழக்கு விசாரணைத் தொடரும்’ எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |