நாடு முழுவதும் மதுக்கடைகளை மூட உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.மேலும் மனுதாரருக்கு ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
வழக்கு விவரம்:
நாடு முழுவதும் மதுக்கடைகளை தற்காலிகமாக மூடக்கோரி டெல்லியை சேர்ந்த கவுதம் சிங் என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். நாட்டில், மதுக்கடைகளுக்கு முன்பும், பான்பராக் கடைகளுக்கு முன்பும் சமூக இடைவெளியை மக்கள் கடைபிடிக்கவில்லை என்று குற்றசாட்டு எழுந்தது. எனவே மதுக்கடைகளை தற்காலிகமாக மூட உத்தரவிடவேண்டும் எனக்கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு காணொலி மூலம் விசாரணைக்கு வந்தது. அப்போது இதுபோன்ற மனுக்கள் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுவிட்டன என நீதிபதிகள் தெரிவித்துள்ளார். மேலும், விளம்பரத்திற்காக இதுபோன்ற மனுக்களை ஏன் தாக்கல் செய்கிறீர்கள்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், மதுக்கடைகள் மற்றும் பான்பராக் கடைகள் முன்பு நிற்கும் மக்களை சமூக இடைவெளியுடன் நிற்க வைப்பது அரசின் கடமை.
இது மாநில அரசுகளின் விவகாரம் அதில் நீதிமன்றங்கள் தலையிட விரும்பவில்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதனால் தேவையில்லாமல் இதுபோன்ற மனுவை தாக்கல் செய்ததற்காக மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழகத்தில் மதுக்கடைகளை மூடக்கோரிய உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தற்போது இடைக்கால தடை விதித்துள்ளது. தமிழக அரசு மேல்முறையீடு செய்த வழக்கில் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.