தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த தடை கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பை தவிர ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து முடிந்து விட்டது. இந்த நிலையில் ஊரடங்கால் ஒத்திவைப்பட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1ம் தேதி முதல் நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
அதன்படி ஜூன் 1ம் தேதி – மொழிப்பாடம், ஜூன் 3ம் தேதி – ஆங்கிலம், ஜூன் 5ம் தேதி – கணிதம், ஜூன் 8ம் தேதி – அறிவியல், ஜூன் 10ம் தேதி – சமூக அறிவியல், ஜூன் 6ம் தேதி – விருப்ப மொழிப்படம், ஜூன் 12ம் தேதி – தொழிற்பாடம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவுகளுக்கு இடையே தேர்வு நடைபெற உள்ளதால் அதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
தேர்வு மையத்திற்கு வருகின்ற மாணவர்கள் எந்தப்பகுதியில் இருந்தாலும் அவர்களை அழைத்து வருவதற்கும், தேர்வு முடிந்த பிறகு மீண்டும் அந்தந்த பகுதிகளில் சென்று விடுவதற்கும் பேருந்து வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஜூன் 1ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த கூடாது, தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என வழக்கறிஞர் ஸ்டாலின் ராஜா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதன் மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மாணவர்கள், பெற்றோர் யாரும் வழக்கு தொடராத நிலையில் வழக்கறிஞர் தொடர்ந்த மனுவை எப்படி ஏற்க முடியும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து தேர்வை ரத்து செய்யக்கோரிய மனுவை வழக்கறிஞர் ஸ்டாலின் ராஜா வாபஸ் பெற்றார். எனவே பொதுநல வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம் தேர்வு நடத்த தடை இல்லை என அறிவித்துள்ளது.