சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகளின் சான்றளிக்கப்படும் நகல்கள் தமிழில் வழங்கப்பட வேண்டும் என்று குடியரசு தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சிறப்பு பட்டமளிப்பு விழாவானது சென்னை தரமணியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி சட்டத்துறை அமைச்சர் C.V.சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் சதாசிவம்,பாப்டே, தஹில் ரமாணி உள்ளிட்ட 3 நீதியரசர்களுக்கு மாண்பமை சட்டவியல் முனைவர் பட்டத்தை குடியசுத் தலைவர் வழங்கினார்.
இதையடுத்து விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாண்பமை சட்டவியல் முனைவர் பட்டத்தை பெற்ற நீதிபதிகளின் சிறப்புகளை ஆங்கிலத்தில் குறிப்பிட்டு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அதன் பின் தொடர்ந்து தமிழில் பேசிய முதலமைச்சர், மனுநீதிச் சோழன், சி.பி.சக்கரவர்த்தி என நீதிக்காக தலைவணங்கும் எண்ணற்ற மன்னர்கள் வாழ்ந்த மண் தமிழ்நாடு என்று கூறினார். மேலும் இந்திய அரசியலமைப்பின் படி நீதித்துறை,ஆட்சித்துறை,சட்டமன்ற துறை மற்றும் பத்திரிக்கை துறை உள்ளிட்ட நான்கு தூண்களும் தங்களது எல்லைக்குள் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்றும், அப்போதுதான் மக்கள் அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ முடியும் என்றும் தெரிவித்தார்.
இதனையடுத்து நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தீர்ப்புகளை அந்தந்த மாநில மொழிகளில் வெளியிட உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கலாம் என்ற ஆலோசனையை கடந்த 2017ஆம் ஆண்டு தான் முன்வைத்ததாக குறிப்பிட்டார். இந்த ஆலோசனையை சட்டீஸ்கர் உள்ளிட்ட உயர் நீதிமன்றங்கள் செயல்படுத்துவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார். தீர்ப்புகளின் சான்றளிக்கப்பட்ட நகல்கள் கேரள உயர்நீதிமன்றத்தில் மலையாளத்திலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழிலும் கிடைக்கச் செய்யலாம் என்று அவர் கூறினார்.
மேலும் வாய்தா என்னும் சட்ட கருவி அவசரகால பயன்பாட்டிற்கு பதிலாக வழக்கு விசாரணையை தாமதப்படுத்துவதற்கு தவறாக பயன் படுகிறது என்றும் குடியரசுத்தலைவர் குறிப்பிட்டார். ஏழை பணக்காரர் வேறுபாடின்றி ஒரே மாதிரியாக சட்டத்தை அணுக முடியவில்லை என்றால் அது குடியரசு முறையே பரிகசிப்பதாக ஆகிவிடும் என்று கூறிய அவர், சட்ட தொழில்துறை இந்த நிலைக்கு ஒட்டு மொத்தமாக தீர்வு காண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.