டெல்லி, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் மாசு அபாய நிலையைத் தாண்டியுள்ளது. இதனால், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தும் பல முன்னெச்சரிக்கை எடுத்தும் டெல்லி அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. உச்ச நீதிமன்றத்தில் டெல்லி மாசு குறித்து தொடரப்பட்ட வழக்கை அருண் மிஸ்ரா, தீபக் குப்தா கொண்ட அமர்வு விசாரித்துவருகிறது.
காற்று மாசு மிகவும் மோசமான நிலையை அடைந்ததாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், கட்டுமான தொடர்பான தொழில்கள் மேற்கொள்ள தடைவிதித்தனர். மேலும், அவர்கள் கட்டுமான தொழில்களை தொடர்ந்தால் ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தனர். அபாய நிலையைத் தொடர்ந்தாலும் மக்கள் இறப்பதைக் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.
இது குறித்தி நீதிமன்றம், “தடையை மீறி கழிவுகளை எரித்தால் ரூ.5000 தடைவிதிக்கப்படும், தடையை எவரேனும் மீறினால் அதற்கு உள்ளாட்சி அலுவலர்களே பொறுப்பேற்க வேண்டும். விஞ்ஞான தரவுகளின்படி இங்கு வாழும் மக்களின் ஆயுட்காலம் குறைந்ததாகக் கூறப்படுகிறது, பொறுப்புகளை தட்டிக்கழிக்காமல் அனைவரும் ஒன்றுசேர்ந்து நிலையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்” எனத் தெரிவித்தது.
மாசுக்கு காரணமாக உள்ள தொழிற்சாலைகளை மூட மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.