சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், கூட்டுறவு சங்கங்களின் வரலாற்றில் முதல் முறையாக பயிர் கடன் அளவு ரூ.10,000 கோடியை தாண்டியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 33, 487 கடைகளில் காலியாக உள்ள 5,578 விற்ப்பனையாளர் பணியிடங்களுக்கும், 925 கட்டுநர் பணியிடங்களும் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் விற்பனையாளர் பணிக்கு 2,06,641 விண்ணப்பங்களும், உதவியாளர் பணிக்கு 23,166 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளது. மொத்தம் 653 பணியிடங்கள் 2,29,807 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வரும் இந்த விண்ணப்பங்கள் பெற நவம்பர் 14ஆம் தேதி கடைசி நாளாகும். இந்த காலி பணியிடங்கள் அனைத்தும் 2023 பொங்கல் பண்டிகைக்கு முன்பாக நிரப்பப்பட்டு அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.