சூரியன், நிலவு, பூமி மூன்று ஒரே நேர் கோட்டில் வரும்போது கிரகணங்கள் நிகழ்கிறது. அப்போது நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் சூரிய கிரகணம் ஏற்படும். ஆண்டுதோறும் சராசரியாக நான்கு கிரகணங்கள் நிகழும். இந்த கிரகணத்தின் போது வீட்டை விட்டு யாரும் வெளியே வரக்கூடாது, சாப்பிடக்கூடாது என்ற எண்ணமும், குறிப்பாக கர்ப்பிணிகள் வீட்டுக்குள்ளே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இல்லையென்றால் அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. கிரகணத்தின் போது கோயில்களின் நடையும் சாத்தப்படுவது வழக்கமாக உள்ளது. கிரகணத்துக்கு பின் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட பின்பு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதே நேரத்தில் அறிவியல் அற்புதம் நிகழ்வுகளின் ஒன்றான சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் தான் பார்க்கக் கூடாதே தவிர டெலஸ்கோப், பின் கேமரா அல்லது சிறப்பு கேமராக்கள் மூலம் பொதுமக்கள் கண்டு களிக்கலாம் என்று அறிவியல் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
அதனை தொடர்ந்து கிரகணம் குறித்து மக்கள் மத்தியில் உள்ள அவநம்பிக்கைகளை மாற்றும் நோக்கத்திலும் இந்த அற்புதமான அறிவியல் நிகழ்வு பற்றிய விழிப்புணர் ஏற்படுத்தும் விதத்திலும் திராவிட கழக ஒவ்வொரு கிரகணத்தின் போதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று மாலை நிகழ்ந்து சூரிய கிரகணத்தின் போது சென்னை பெரியார் திடலில் சிற்றுண்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கர்ப்பிணிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர்கள் பங்கேற்றனர். அவர்களுடன் அமர்ந்து திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி ஆகியவர்கள் சிற்றுண்டி உண்டு மகிழ்ந்தனர். மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு சூரிய கிரகணத்தன்று நடந்த நிகழ்வில் கீர்த்தி என்ற பெண் பங்கேற்றார். அவருக்கு 2020 ஜூனில் ஆண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும் சேயும் தற்போது நலமாக உள்ளனர் என்று திராவிட கழகத்தினர் பூரிப்புடன் தெரிவித்துள்ளனர்.