சுருக்குமடி வலையை பறிமுதல் செய்த மீன்வளத்துறை அதிகாரிகளை மீனவர்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறதா? எஸ்.டி.பி., ஐ.பி. விசைப்படகுகளில் விதிமுறைகளுக்கு உட்பட்டு மீன்பிடிக்க செல்கின்றனரா? என மீன்வளத்துறை அதிகாரிகள் கடலிலும், மீன்பிடி துறைமுகத்திலும் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் கடலூர் தேவனாம்பட்டினம் கடல் பகுதியில் மீன்பிடிக்க படகில் தயாராக இருந்த மீனவர்களை விரட்டியடித்தனர். இந்நிலையில் சொத்திக்குப்பம் மீனவ கிராமத்தில் மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்துவதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சொத்திக்குப்பத்திற்கு காவல்துறையினர் சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது மீனவரிடமிருந்த ஒரு சுருக்குமடி வலையை மீன்வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது காவல்துறையினர் சிலரிடம் சுருக்குமடி வலையை பறிமுதல் செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்கு அப்பகுதியில் உள்ள மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து கரையோரம் பயன்படுத்தாமல் வைத்திருக்கும் மீன்பிடி வலையை பறிமுதல் செய்யக் கூடாது எனக்கூறி மீன்வளத் துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையறிந்த 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளத்துறை அதிகாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி 3 மணி நேரத்துக்குப் பின் மீன்வளத்துறை அதிகாரிகளை மீட்டனர்.