காணாமல் போன சர்வேயர் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாசரேத் பகுதியில் பால்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாபு சங்கர் என்ற மகன் இருந்துள்ளார். இவர் நெல்லை மாவட்டம் திசையன்விளை தாலுகா அலுவலகத்தில் சர்வேயராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பாபு சங்கர் கடந்த மார்ச் மாதம் 10-ந்தேதி காலையில் வேலைக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டு சென்றுள்ளார். ஆனால் வேலை முடிந்து மாலையில் பாபு சங்கர் வீட்டிற்கு வராததால் அவரது பெற்றோர் அவரை தேடினர்.
மேலும் இதுகுறித்து பாபு சங்கர் கடந்த மார்ச் மாதம் 15-ந்தேதி நாசரேத் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நாசரேத் ஞானராஜ் நகர் தேரிக்காட்டு பகுதியில் மனித எலும்புக்கூடு கிடந்துள்ளது. அதன் அருகில் ஒரு ஜோடி செருப்பும், அங்குள்ள பனை மரத்தின் துவாரத்தில் ரூ.5,680 பணமும் சொறுகி வைக்கப்பட்டிருந்தது. இதனையறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
மேலும் மாயமான பாபு சங்கரின் பெற்றோர் மற்றும் உறவினர்களும் எலும்புக்கூட்டை பார்வையிட்டனர். அப்போது அங்கு கிடந்த செருப்பு பாபு சங்கருடையது என்று தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் அந்த எலும்புக்கூட்டை கைப்பற்றி தூத்துக்குடி ஆய்வகத்துக்கு தடயவியல் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அந்த ஆய்வில் எலும்புக்கூடு பாபுசங்கருடையது என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் காவல்துறையினர் இதுகுறித்து நடத்திய விசாரணையில் பாபுசங்கருக்கு மதுஅருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் பாபுசங்கர் ஞானராஜ் நகர் தேரிக்காட்டு பகுதிக்கு மது அருந்த சென்றபோது, போதையில் பணத்தை பனை மரத்தில் சொறுகி வைத்துவிட்டு மயங்கி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.