பாலிவுட் நடிகர் சுஷாந்த் தற்கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்கு மும்பை போலீசார் ஒத்துழைப்பு வழங்கவில்லை என பீகார் போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்பூத் கடந்த மாதம் 14ஆம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு பாலிவுட் திரை உலகில் உள்ள பிரபலமான நடிகர்கள் தான் காரணம் என சக நடிகர்கள் பலர் குற்றம் சாட்டினர். மேலும் சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் சுஷாந்தின் தற்கொலைக்கு நடிகை ரியா சக்கரமூர்த்தியே முக்கிய காரணம் என அவரது தந்தை பாட்னா போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரை மும்பைக்கு மாற்றக் கோரி நடிகை ரியா சக்கரமூர்த்தி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதனிடையே நேற்று பீகார் போலீசார் மும்பையில் உள்ள பந்த்ரா காவல் நிலையம் உட்பட பல இடங்களில் விசாரணை நடத்தினர். ஆனால் வழக்கு விசாரணையில் மும்பை போலீசார் தங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என பீகார் போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். உடற்கூறு ஆய்வு அறிக்கை சிசிடிவி பதிவுகள் உள்ளிட்ட எந்த ஆவணங்களும் இதுவரை வழங்கப்படாததால் விசாரணையை தொடங்க முடியவில்லை என பீகார் டிஜிபி திரு.குப்தேசபாண்டு தெரிவித்தார்.