வேலைக்கு சென்ற துப்புரவு தொழிலாளி திடீரென நெஞ்சுவலியால் இறந்துவிட்டதாக கூறியதால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் கிருஷ்ணா நகர் தொகுதியில் வீரபாண்டி என்பவர் வசித்துவருகிறார். இவர் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு தொழிலாளியாக அங்குள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் பணியில் இருந்தவர் நெஞ்சுவலியால் இறந்து விட்டதாக அதிகாலை 4 மணி அளவில் அவரது வீட்டிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடலானது தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அவரது மனைவி புலமாடி மற்றும் பிற உறவினர்கள் சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அவரது உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர். அதன் பின் அவரது மனைவி முத்தையாபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து வீரபாண்டியன் மரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இது குறித்து போலீஸார் கூறும்போது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் வீரபாண்டி இறந்ததற்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று கூறியுள்ளனர்.