மனைவி நடத்தையில் சந்தேகம் கொண்டு கொலை செய்த கணவனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடை சேர்ந்தவர் இளையராஜா. இவரது மனைவி சங்கீதா இவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். சங்கீதா வீட்டிலேயே தையல் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இளையராஜா வெளிநாடு சென்று வேலை செய்கிறேன் என்று கூறி அடிக்கடி வெளிநாடு சென்று வேலை செய்யாமல் பணத்தை விரயம் செய்து வந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே சண்டைகள் பல ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிவதாக கூறி சென்னையில் தங்கி வந்துள்ளார் இளையராஜா. அவ்வாறு தங்கி இருக்கையில் மனைவி சங்கீதாவின் நடத்தையில் சந்தேகம் கொண்ட இளையராஜா மனைவியிடம் சண்டை போட்டு வந்துள்ளார்.
இதனையடுத்து நேற்று வீடு திரும்பிய இளையராஜா மனைவியிடம் சண்டை போட்டு தகராறு செய்துள்ளார். வாய்ச்சண்டை ஆக இருந்தது அடிதடியாக மாறி ஆத்திரம் கொண்ட இளையராஜா கத்தரிக்கோலை எடுத்து மனைவியின் வயிற்றில்குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். சண்டையில் படுகாயமடைந்த சங்கீதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சங்கீதா உயிரிழந்தார்.
இதுகுறித்து பாப்பநாடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு புகாரின் அடிப்படையில் கொலை செய்த இளையராஜாவை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.