பட்டப்பகலில் பெண்ணிடம் இருந்து தங்க சங்கிலியை பறிக்க முயற்சி செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள குளக்கட்டாக்குறிச்சி பகுதியில் கண்ணபிரான் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு செல்வராணி என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் செல்வராணி தனது வீட்டில் இருந்த குப்பைகளை அள்ளிக்கொண்டு அப்பகுதியில் அமைந்துள்ள குப்பை கிடங்கில் போடுவதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற 2 நபர்கள் திடீரென செல்வராணி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பிடித்து இழுத்து பறிக்க முயற்சி செய்துள்ளனர். இதனை அறிந்த செல்வராணி தனது கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு அலறி சத்தம் போட்டுள்ளார்.
அந்த அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து செல்வதற்குள் மர்ம நபர்கள் இரண்டு பேரும் தாங்கள் மாட்டிக் கொள்வோம் என்று நினைத்து தங்கச்சங்கிலியை பறிக்காமல் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இதனால் செல்வராணியின் கழுத்தில் காயம் ஏற்பட்டதால் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இது குறித்து செல்வராணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பட்டப்பகலில் பெண்ணிடம் இருந்து தங்க சங்கிலியை பறிக்க முயற்சி செய்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.