காரப்பள்ளம் சோதனை சாவடியில் யானை வாகனத்தை வழிமறித்து அங்குமிங்கும் சுற்றி திரிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், உட்பட 10 வனச்சரகங்கள் இருக்கின்றது. இங்கு இருக்கக்கூடிய வனப்பகுதிகளில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டெருமை, மான் போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றது. இவற்றில் ஆசனூர் வனப்பகுதி வழியாக திண்டுக்கல்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை இருக்கிறது. கடந்த சில மாதங்களாக தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள காரப்பள்ளம் சோதனைச் சாவடி அருகில் யானைகள் கடந்து செல்வது வழக்கமாக இருக்கின்றது.
இவ்வாறு வரும் யானைகள் சாலையில் நின்று கொண்டு லாரிகளை வழிமறித்து அதிலிருக்கும் கரும்புகளை தின்பது தொடர்ச்சியாக நடைபெறுகிறது. இந்நிலையில் இரவு அந்த சோதனைச்சாவடி பகுதிக்கு யானை ஒன்று வந்து அவ்வழியாக சென்ற வாகனங்களை வழிமறித்து சாலையில் அங்கும் இங்குமாக சுற்றி திரிந்தது. இதன் காரணமாக சாலையில் வாகனங்கள் வரிசையாக நின்றது. அதன்பின் சிறிது நேரத்திற்குப் பின் அந்த யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இதனால் அப்பகுதியில் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.