லாரி மீது சுற்றுலா வேன் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூரில் வாணியம்பாடி பகுதியில் வசித்து வரும் 20-க்கு மேற்பட்டவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வேனில் சுற்றுலா பயணம் மேற்கொண்டனர். இதனையடுத்து அவர்கள் மீண்டும் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக மதுரையிலிருந்து வாணியம்பாடிக்கு வேனில் வந்து கொண்டிருந்தனர். அந்த வேனை வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த சலீம் என்பவர் ஓட்டி வந்தார். இந்நிலையில் வேன் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் கணவாய் வழியாக வந்து கொண்டிருந்தது. அப்போது கட்டிமேடு பகுதியை கடந்த போது டிரைவர் தன் கட்டுப்பாட்டை இழந்து வேன் தாறுமாறாக ஓடி முன்னால் சென்ற லாரி மீது பயங்கரமாக மோதியது.
இதனால் சலீம், மாற்று டிரைவர் கோபால் மற்றும் வேனில் பயணம் மேற்கொண்ட வாணியம்பாடி மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த பரத், சற்குணம், ஜானகிராமன், வினிதா, ராசுக்குட்டி, கண்ணன், இளம்பரிதி, சுகுணாராணி, வைஷ்ணவி, சாதனா, தர்ஷினி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டவர்கள் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி சுற்றுலா பயணம் மேற்கொண்ட பரத் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்த விபத்தினால் சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து காவல்துறையினர் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் போக்குவரத்தை மாற்று பாதையில் திருப்பி விட்டனர். அதன்பின் லாரி மற்றும் சுற்றுலா வேனை காவல்துறையினர் பொக்லைன் எந்திரத்தின் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.