வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளை காவல்துறையினர் சோதனை சாவடியில் நிறுத்தி திருப்பி அனுப்புகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறைக்கு வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்றுள்ளனர். இவர்களை வனத்துறையினர் சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தியதால் அப்பகுதியில் வேன், கார் போன்ற வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றுள்ளது. இந்நிலையில் வால்பாறை செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகளை அங்கிருந்து செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறும் போது சனி, ஞாயிறு விடுமுறை தினத்தை முன்னிட்டு வால்பாறையில் தங்குவதற்காக ஏற்கனவே அறைகளை முன்பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் தற்போது வால்பாறைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதால் சோதனை சாவடியிலேயே சுற்றுலா பயணிகளை தடுத்து நிறுத்துவதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும் போது சோதனை சாவடியில் சுற்றுலா பயணிகளை தடுப்பதற்காக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வால்பாறை பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மட்டுமே ரேஷன் கார்டு அல்லது ஆதார் போன்ற ஏதாவது ஒரு ஆவணத்தை காண்பித்துவிட்டு செல்லலாம் என தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து அரசின் விதிமுறைகளை மதித்து வால்பாறைக்கு வருவதை சுற்றுலா பயணிகள் தவிர்க்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.