இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் ( IRCTC) சார்பாக இயங்கிவந்த “பாரத் தர்ஷன்” சுற்றுலா ரயில் திட்டம் சென்ற 2019ம் வருடம் ஜூன் மாதம் முதல் நிறுத்தப்பட்டது. இதையடுத்து புது கொள்கை மற்றும் தனியார் பங்களிப்புடன் கூடிய “பாரத் கவுரவ்” என்ற புது சுற்றுலா ரயில் திட்டம் கடந்த மார்ச் மாதம் முதல் துவங்கப்பட்டது. எனினும் பழைய திட்டத்தை விடவும் இத்திட்டத்தில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டினர்.
இதனால் நியாயமான கட்டணத்தில் பயணிகள் பயன்பெறும் அடிப்படையில் பாரத் கவுரவ் சுற்றுலா ரயில் திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை விடுத்தனர். அதன்பின் பாரத் கவுரவ் திட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது, பாரத் தர்ஷன் சுற்றுலா ரயில் திட்டத்தை ஒப்பிடுகையில், பாரத் கவுரவ் திட்டத்தில் கட்டணம் அதிகம் இருப்பதாக பயணிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
அதை பரிசீலனை செய்த ரயில்வே நிர்வாகமானது தனியார் சுற்றுலா ஏற்பாட்டாளர்களுக்குரிய கட்டணத்தை, கணிசமாக குறைத்துள்ளது. அந்த வகையில் பழைய கட்டணத்தை விட 30 சதவீத கட்டணம் குறைய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக இத்திட்டத்தின் கீழ் அதிக பயணிகள் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.