சுவரொட்டி ஒட்டுவதை தவிர்ப்பதற்காக சிறுவர்-சிறுமிகள் சுவரில் வண்ண ஓவியங்களை வரைந்தனர்.
சென்னை மாநகராட்சியை புதுப்பிக்கும் விதமாக பொது சுவர்களில் ஒட்டியுள்ள சுவரொட்டிகளை அகற்றி, அதில் அழகான ஓவியங்கள் வரையும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போரூர் லட்சுமி நகரில் மாநகராட்சி சார்பில் பராமரிப்பில் உள்ள பூங்காவின் சுற்றுச்சுவரில் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டது.
ஆகவே பூங்கா அருகில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் சுற்றுச்சுவரில் வெளியாட்கள் யாரும் சுவரொட்டிகள் ஒட்டாத வகையில் மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி, அங்கு வசித்து வருபவர்களே தங்களின் குழந்தைகள் மூலம் வண்ண ஓவியங்கள் வரைவதற்கு முடிவுசெய்தனர்.
இதனால் தயாநிதி, ஆனந்தகுமார் ஆகிய 2 ஓவியர்களின் உதவியுடன் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் சுற்றுச்சுவரில் மீன், யானை, சிறுத்தை, கார், மரங்கள் என வண்ணமயமான ஓவியங்களை அங்கு வசித்து வரும் சிறுவர்-சிறுமிகள் அழகாக வரைந்தனர். இவ்வாறு கண்ணை கவரும் வகையில் வரையப்பட்ட அந்த ஓவியங்களை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர்.