எகிப்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் எதிர்பாராத விபத்திற்கு காரணம் மம்மிகளை அருங்காட்சியகத்தில் இருந்து மாற்றம் செய்வது தான் என்று சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.
சீனாவில் இருந்து நெதர்லாந்து நாட்டிற்கு 20000 கண்டெய்னர்களுடன் சென்றுகொண்டிருந்த எவர்கிரீன் கப்பல் திடீரென பலத்த காற்று வீசியதால் எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாய் குறுக்கே சுவரின் மீது மோதி பெரும் விபத்துக்குள்ளானது.இந்த ராட்சத கப்பலின் விபத்தால் மற்ற கப்பல்களினால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இந்தவழியாக செல்லும் நூற்றுக்கணக்கான கப்பல்களின் போக்குவரத்தில் தடை ஏற்பட்டது.
மேலும் சர்வதேச அளவில் பல்லாயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த எவர்க்ரீன் கப்பல் விபத்திற்குள்ளானதற்கு காரணம் எகிப்திலுள்ள பார்வோன்கள் என்று அழைக்கப்படும் மம்மிகளின் சாபம் என்று சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
இதுபற்றி ஆய்வு செய்ததில் ஏப்ரல் 3 ஆம் தேதி எகிப்து தலைநகர் கெய்ரோவின் Tahrir சதுக்கத்திலுள்ள மம்மிகளின் அருங்காட்சியகத்தில் காணப்படும் மம்மிகளை Fustat பகுதியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்திற்கு மாற்ற இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த அருங்காட்சியகத்தில் உள்ள இரண்டாம் மன்னர் ராம்செஸ் மற்றும் ராணி அஹ்மோஸ்- நஃபெர்தாரி (Ahmose-Nefertari) யின் மம்மிகளும் மாற்றபடுவதாக கூறியுள்ளனர்.
ஆகையால் அவ்வாறு மாற்றப்படும் மம்மிகளின் சாபத்தால் தான் இவ்வாறு ஆபத்துகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த எவர் கிரீன் கப்பல் விபத்து மட்டுமல்லாது கடந்த மார்ச் 26ம் தேதி எகிப்தில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.கெய்ரோவில் திடீரென ஒரு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 23 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதுவரை இல்லாமல் தற்போது இவ்வாறு தொடர்ந்து நடக்கும் விபத்துகளை எண்ணிப் பார்க்கையில் மம்மிகளின் சாபம்தான் காரணமாக இருக்குமோ என்று சந்தேகத்துடன் பலர் ட்விட்டரில் பதிவு செய்து வருகின்றனர். இதுபோன்ற கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பரவி வருவதை தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் . இந்த மம்மிகளை மாற்றம் செய்வதால் மரியாதையும் நன்மையும் தான் ஏற்படுமே தவிர சாபம் எதுவும் ஏற்படாது என்று கூறியுள்ளனர்.