கேரளா தங்க கடத்தல் வழக்கில் IAS அதிகாரி சிவசங்கர் தொடர்பு குறித்து 10 நாளில் உரிய முடிவு எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கெடு விதித்துள்ளது.
சிவசங்கரிடம் விசாரணை நடத்தி வரும் தேசிய புலனாய்வு முகமை மற்றும் சுங்கத்துறைக்கு இதுதொடர்பான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது. இரு அமைப்புகளும் சிவசங்கரிடம் தனித்தனியாக நான்கு முறை விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது தங்கராணி ஸ்வப்னாயுடனான தொடர்பு குறித்து கேட்டு அறிந்து உள்ளனர். அதற்கு பதிலளித்துள்ள சிவசங்கர் தமது உறவினரின் மனைவி என்ற முறையில் மட்டுமே ஸ்வப்னாவை தெரியும் அவருடன் வேறு எந்த தொடர்பும் கிடையாது என மறுத்துள்ளார்.
சிவசங்கர் இன்னும் விசாரணை வளையத்திற்குள் வைக்கப்பட்டுள்ளார். கேரள அரசின் உயர் பதவியில் உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரை அதிக நாட்கள் சந்தேகத்தின் கீழ் வைத்திருக்க கூடாது. அவர் விஷயத்தில் 10 நாளில் ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் திட்டவட்டமாக கூறியுள்ளது. இதையடுத்து கேரளத் தலைமைச் செயலகத்தில் சிவசங்கர் அறையில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில் NIA தீவிரம் காட்டி வருகிறது.
கேரள முதல்வரின் முதன்மைச் செயலாளர் மற்றும் ஐடி துறையின் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள சிவசங்கர் சொப்னா கும்பலுடன் ஏற்பட்ட தொடர்பு புகாரில் சஸ்பெண்ட் ஆகியுள்ளார். இதற்கிடையே வெளிநாட்டிலிருந்து தூதரகம் பெயரில் கடத்தி வரப்பட்ட தங்க கட்டிகளை கூட்டாளிகள் தமிழகம் மற்றும் மஹாராஷ்ட்ராவில் விற்பனை செய்ததாக கைதான சொப்னா கூட்டாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர். அதன்பேரில் திருச்சியை சேர்ந்த 6 பேரை NIA அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக தகவல் வெளியானது. அதனை திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் மறுத்துள்ளார்.