Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கட்டிலுக்கு அடியில் இருக்கு” மகனின் பரபரப்பு புகார்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

வீட்டினை சுத்தம் செய்வதற்காக சென்ற தூய்மைப் பணியாளர் தங்க நகையை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள திருமுல்லைவாயல் பகுதியில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 18ஆம் தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட சதீஷின் தாயார் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். எனவே சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சதீஷின் வீட்டை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் சதீஷின் வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஒப்பந்த தூய்மை பணியாளரான புதூர் பகுதியில் வசிக்கும் ரகு என்பவர் ஈடுபட்டுள்ளார். இவருடன் இணைந்து 4 பேர் சதீஷின் வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு ஆவடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சதீஷின் தந்தையான அலெக்சாண்டர் என்பவர் வீட்டில் இருக்கும் கட்டிலுக்கு அடியில் 7 பவுன் தங்க நகையை வைத்திருப்பதாக தனது மகனிடம் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து தந்தை கூறியபடி தங்க நகையை சதீஷ் தேடும் போது, நகை அங்கு இல்லை. இதுகுறித்து திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் சதீஷ் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சதீஷ் வீட்டிற்கு சென்று தூய்மைப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களை கண்காணித்துள்ளனர்.

அப்போது காவல்துறையினருக்கு புதிதாக செல்போன் வாங்கி கொண்டு ஆடம்பரமாக இருந்த ரகு மீது சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் அவரை பிடித்து விசாரித்த போது, ரகு சதீஷின் வீட்டில் 7 பவுன் தங்க நகையை திருடி சென்றதும், அதனை அடகு வைத்த பணத்தில் செல்போன் வாங்கியதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ரகுவை கைது செய்ததோடு, அடகு வைத்த நகையை மீட்டு சதீஷிடம் ஒப்படைத்தனர்.

Categories

Tech |