கனடா நாட்டை சேர்ந்த ஒரு நீச்சல் வீராங்கனைக்கு யாரோ மயக்கம் மருந்து கொடுத்து சுயநினைவை இழக்க செய்ததாக கூறியிருக்கிறார்.
புதாபெஸ்ட்டில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக 22 வயதுடைய Mary-Sophie Harvey என்ற வீராங்கனை சென்றிருக்கிறார். அப்போது, போட்டியின் கடைசி நாளில் அவர் திடீரென்று மயக்க நிலைக்கு சென்றார். கண்விழித்த உடன் தான் படுக்கையில் இருந்ததாகவும், குழுவின் மேலாளர் மற்றும் மருத்துவர் இருந்ததை பார்த்தவுடன் திகைத்து போனதாகவும் கூறியிருக்கிறார்.
சுமார் 6 மணி நேரங்களாக தன்னைச் சுற்றி என்ன நிகழ்ந்தது? என்றே தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார். எனினும் தன் உடலில் அதிகமான காயங்கள் இருந்ததை கவனித்திருக்கிறார். தன் உடலில் ஏற்பட்ட காயங்களை புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, என் உடலின் மேலும் சில பகுதிகளிலும் காயங்கள் இருக்கிறது.
ஆனால் அதை என்னால் காட்ட முடியாது. யாரோ ஒரு நபர் எனக்கு மயக்க மருந்து கொடுத்து என்னை ஏதோ செய்திருக்கலாம் என்று தான் கருதுவதாக தெரிவித்துள்ளார். மேலும் இதே போல் வேறு யாருக்கும் நடக்காமல் இருக்க, கவனமாக இருங்கள் என்று பிற வீராங்கனைகளிடம் கூறியிருக்கிறார்.