அமாவாசை தினத்தை முன்னிட்டு அம்மன் கோவில்களில் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சித்தலூர் கிராமத்தில் இருக்கும் பெரியநாயகி அம்மன் கோவிலில் அமாவாசை தினத்தையொட்டி ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இந்நிலையில் பால், இளநீர், தேன் மற்றும் தயிர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று இருக்கிறது.
இதில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அம்மன் கோவிலில் வலம் வந்து மண்டபத்தின் நடுவில் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் அமர வைத்து தாலாட்டு நடைபெற்றிருக்கிறது. அதன்பின் வேங்கைவாடி உள்பட பல கிராமங்களில் வசிக்கும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்துள்ளனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
இதே போல் தேவபாண்டலம் பெரியநாயகி அம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் அம்மனுக்கு இளநீர், பன்னீர், தயிர், பால், சந்தனம் உள்பட 16 வகையான பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதனை தொடர்ந்து செவ்வாடை அணிந்து பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி கோவிலை 3 முறை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர். மேலும் இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது.