பண மோசடி தொடர்பாக நிரவ் மோடி மற்றும் அவரது சகோதரியின் சுவீஸ் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது
இந்தியாவில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி(48). நிரவ் மோடியும் அவரின் நெருங்கிய உறவினரான மெகுல் சோக்ஷியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் வாங்கி பண மோசடி செய்த வழக்கை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகள் விசாரித்து வருகிறது. இதையடுத்து நிரவ் மோடி இங்கிலாந்துக்கு தப்பி சென்று வசித்து வருகிறார். இவரை இந்தியா கொண்டு வருவதற்கு இந்திய அதிகாரிகள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது பண மோசடி செய்த நிரவ் மோடி மற்றும் அவரது சகோதரியின் சுவீஸ் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அவர்கள் இருவரது கணக்கில் மொத்தம் ரூ 283.16 கோடி வைப்புத்தொகை உள்ளது. இந்த கணக்குகளை முடக்குமாறு அமலாக்கத்துறை சுவிஸ் வங்கி அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியிருந்தது.அதன் படி இருவரது கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. நிரவ் மோடி பெயரில் உள்ள வங்கி கணக்குகளில் 3,73,11,596 டாலர் பணமும் அவரது சகோதரி பெயரில் உள்ள வங்கி கணக்கில் 27,38,136 டாலர் பணமும் இருந்தது குறிப்பிடத்தக்கது.