சுவிட்சர்லாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்காக 1 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதோடு தேவாலயங்களில் மணிகள் ஒலிக்கப்பட்டது.
சுவிட்சர்லாந்தில் உள்ள பொதுமக்கள் இன்று காலை 11:59 மணிக்கு மௌன அஞ்சலி செலுத்தியுள்ளனர். மேலும் தேவாலயங்களில் மணிகள் ஒலித்திருக்கிறது. இது எதற்காக என்றால், சுவிட்சர்லாந்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு 9 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதுகுறித்து சுவிட்சர்லாந்து பொருளாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி 1 வருடத்திற்கு மேலாகிவிட்டது .
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சுவிட்சர்லாந்தில் மட்டும் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் பலர் பக்க விளைவுகளால் சிரமப்பட்டு வருகின்றனர். பல்லாயிரக்கணக்கானோர் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். அவர்கள் முழு நம்பிக்கையையும் இழந்து விட்டனர்” என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் சுவிட்சர்லாந்தின் பொருளாதார அமைச்சரும் ஜனாதிபதியுமான Guy Parmelin, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு நமது இரங்கலை தெரிவிக்கும் வகையில் மௌன அஞ்சலி நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்று கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஒரு நிமிட மௌன அஞ்சலி உயிரிழந்தவர்களுக்கு துக்கம் அனுசரிக்க மட்டுமல்ல நமது ஒற்றுமை நட்பு ஆகியவற்றை வெளிக்கொண்டு வருவதற்காகவும் தான் என்று பொருளாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.