அபுதாபியில் சினோபார்ம் மருந்தை 3 வயது முதல் 17 வயதுடைய சிறுவர், சிறுமிகளுக்கு செலுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
அமீரகத்தில் கொரோனா பெருந்தொற்றால் சிறு குழந்தைகளும் பாதிக்கப்பட்டு வருவதால் அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3 வயது முதல் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 3 வயது முதல் 17 வயது உடையவர்களுக்கு சினோபார்ம் தடுப்பூசி எந்த அளவில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது குறித்து ஆய்வுகள் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கடந்த சில மாதங்களாக உலக அளவில் தடுப்பூசி தயாரிக்கும் அமெரிக்கா, சீனா, இந்தியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் இது போன்ற மருத்துவ பரிசோதனைகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.
அதனை போலவே இந்த தடுப்பூசி ஆய்வுகள் மத்திய கிழக்கு நாடுகளில் அமீரகத்தில் முதன்முறையாக நடைபெற்ற உள்ளது. அபுதாபி சுகாதாரத்துறையினர் ஒத்துழைப்பில் சர்வதேச மருத்துவ விதிமுறைகளை கடைபிடித்து அமீரகத்தில் வசிக்கும் 3 வயது முதல் 17 வயதுடைய 900 நபர்களிடம் இந்த ஆய்வுகள் தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. மேலும் சுகாதார அமைச்சகத்தால் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வருபவர்கள் மற்றும் பெற்றோருடைய பாதுகாப்புடன் வரும் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. அபுதாபி பட்டத்து இளவரசரின் அலுவலக தலைவர் ஷேக் தயப் பின் முகம்மது பின் ஜாயித் இந்த பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
மேலும் மருத்துவ நிபுணர்கள் இந்த தடுப்பூசியினால் குழந்தைகளுக்கு பக்க விளைவுகள் ஏதேனும் ஏற்படுகிறதா ? என்று ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வானது பல பிரிவுகளாக வயது அடிப்படையில் பிரிக்கப்பட்டு நோய் எதிர்ப்பு தன்மை சினோபார்ம் தடுப்பூசியில் எந்த அளவிற்கு இருக்கும் என்பது குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆய்வில் வெற்றி கிடைத்தால் நடப்பு வருடத்திற்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பரிந்துரைக்கப்படும் என்று சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.