டி 20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
16 அணிகள் பங்கேற்க உள்ள 7 வது டி 20 உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் வருகின்ற அக்டோபர் , நவம்பர் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் 2 ம் அலை தாக்கத்தால், இந்த போட்டி இந்தியாவில் நடத்தப்படுமா, என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒருவேளை இந்தியாவில் போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டால், அதற்கு மாற்று இடமாக ஐக்கிய அரபு அமீரகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஐசிசி கூட்டத்தில் கொரோனா பரவல் சூழலை ஆய்வு செய்து ,டி 20 உலக கோப்பை போட்டியை ,இந்தியாவில் நடத்துவதற்கு ஒரு மாத கால அவகாசம் வழங்குமாறு பிசிசிஐ விடுத்த வேண்டுகோளை ஐசிசி ஏற்றுக்கொண்டது. வருகிற 28-ஆம் தேதி வரை பிசிசிஐ-க்கு கெடு விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் டி 20 உலகக்கோப்பை போட்டியை , இந்தியாவில் நடத்துவதற்கு கால அவகாசம் பிசிசிஐ-க்கு வழங்கப்பட்டிருந்தாலும், கொரோனா பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் போட்டிகளை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை, ஐசிசி திட்டமிட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘ ஐசிசி கூட்டத்தில் டி 20 உலக கோப்பை போட்டியை நடத்த, பிசிசிஐ காலஅவகாசம் கேட்டிருந்தது. பிசிசிஐ போட்டியை நடத்துவதற்கான உரிமையை தக்கவைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டி வந்ததே தவிர இந்தப் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவது குறித்து, கிரிக்கெட் வாரியதிற்கு கவலையில்லை . இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 20 ஆயிரமாக உள்ளது . ஆனால் இது கடந்த ஏப்ரல் மாதத்தையும் விட மூன்றில் ஒரு பங்குதான். இதனால் அக்டோபர் , நவம்பர் மாதத்தில் நடக்கும் , உலக கோப்பை போட்டியின் போது தொற்று பாதிப்பு எப்படி இருக்கும் என்பதை எப்படி கணிக்க முடியும். அதோடு கொரோனா தொற்று சூழலில் இந்தியாவின் விளையாட வெளிநாட்டு வீரர்கள் தயக்கம் காட்டுவார்கள். இதுவே டி 20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தால், வீரர்கள் மகிழ்ச்சியுடன் பங்கேற்பார்கள்’, என்று அவர் தெரிவித்தார் .