இந்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்கும் அணிகளின் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது .
7-வது டி20 உலகக்கோப்பை போட்டி வருகின்ற அக்டோபர் 17-ம் தேதி முதல் தொடங்கி நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இதற்காக 16 அணிகள் பங்கேற்கும் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் சூப்பர் 12 பிரிவில் குரூப் 1 , குரூப்2 என 2 அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் குரூப் 1 -ல் வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து , ஆஸ்திரேலியா ஆகிய 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. இதை அடுத்து குரூப் 2- ல் இந்தியா,பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான்,நியூசிலாந்து அணிகள் இடம்பெற்றுள்ளன. இதில் குரூப் 2 பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான் அணிகள் கடந்த 2019ஆம் ஆண்டிற்குப் பிறகு மீண்டும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
இதையடுத்து தொடக்க லீக் சுற்று போட்டியில் பங்கேற்கும் 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் குரூப் ஏ பிரிவில் இலங்கை ,நெதர்லாந்து ,அயர்லாந்து, நமீபியா ஆகிய 4 அணிகளும் , அதேபோல் குரூப் பி பிரிவில் வங்காளதேசம்,ஓமன், ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா ஆகிய 4 அணிகள் இடம் பெற்றுள்ளன.இதில் முதல் சுற்று லீக் போட்டிகள் முடிவில் ‘ஏ’ பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணியும் ,’ பி’ பிரிவில் 2-வது இடம் பிடிக்கும் அணியும், ‘குரூப் 1’-ல் இடம்பெறும் . இதையடுத்து குரூப் ‘பி ‘ பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணியும், குரூப் ‘ஏ’பிரிவில் 2-வது இடம்பிடிக்கும் அணியும் ‘குரூப் 2’ வில் இடம்பெறும்.