இந்தியா -பாகிஸ்தானுக்கு இடையிலான ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிக்கான டிக்கெட் விற்றுத் தீர்ந்துவிட்டது.
ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் வருகின்ற அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை விறுவிறுப்பாக நடைபெற இருக்கிறது. இந்த டி20 உலக கோப்பை தொடரில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்றுள்ளது. நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகளும் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கின்றது.. இதில் இந்திய அணி தனது முதல் போட்டியில் வரும் 23 ஆம் தேதி பரம எதிரியான பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள இருக்கிறது.. ஆஸ்திரேலியாவின் மெல்போன் ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த போட்டியை எதிர்நோக்கி ரசிகர்கள் இருக்கின்றனர். இந்தியா – பாகிஸ்தான் போட்டி என்றாலே உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு விருந்து தான்.
ஏனென்றால் இருநாட்டு எல்லை பிரச்சினை காரணமாக இரண்டு அணிகளும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தனிப்பட்ட முறையில் தொடர்களில் விளையாடுவது கிடையாது. ஐசிசி நடத்தும் உலகக்கோப்பை, சாம்பியன் டிராபி ஆசிய கோப்பை தொடர்களில் மட்டுமே விளையாடி வருகிறது.. எனவே தான் இந்த போட்டிக்கு அவ்வளவு பெரிய எதிர்பார்ப்பு..
இந்த நிலையில் இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்கத் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே விற்று தீர்ந்து விட்டதாக ஐசிசி தகவல் தெரிவித்துள்ளது. அதாவது ஒட்டுமொத்தமாக இதுவரையில் மொத்தம் 5,00,000 டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்து விட்டதாக தெரிவித்துள்ளது. 82 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த ரசிகர்கள் 16 சர்வதேச அணிகளைச் சேர்ந்த உலகின் சிறந்த வீரர்களைக் காண டிக்கெட்டுகளை வாங்கியுள்ளனர்,
இதுகுறித்து ஐ.சி.சி கூறியதாவது, ஆண்கள் டி20 உலகக் கோப்பை போட்டியை காண்பதற்காக ஏற்கனவே 5 லட்சம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இன்னும் போட்டி நடக்க ஒரு மாதத்திற்கு மேல் இருக்கும் நிலையில், இந்த உலகக் கோப்பை தவிர்க்க முடியாத நிகழ்வாக இருக்கிறது . இன்னும் சில டிக்கெட்டுகள் இருப்பதால் ரசிகர்கள் தங்களது டிக்கெட்டை பாதுகாத்து கொள்வதை உறுதிசெய்ய வேண்டும் என கூறியுள்ளது.