ஜம்மு- காஷ்மீரில் இந்திய ராணுவ வீரர்கள் மீது தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால்,இந்தியா -பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டியை நடத்த கூடாது என்ற கருத்து வலுத்து வருகின்றது.
7-வது டி20 உலக கோப்பை தொடரில் வருகின்ற 24 -ம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதனிடையே இந்தியா, பாகிஸ்தானுடன் விளையாடுவதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது .இதில் மத்திய மந்திரி கிரிராஜ் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறும்போது,” இந்தியா- பாகிஸ்தான் இடையே உறவுகள் நல்ல முறையில் இல்லை. அதோடு காஷ்மீரில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இதனால் இரு அணிகளுக்கிடையேயான போட்டியை நடத்த கூடாது என்றும், இது குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும்” என்றும் கூறியிருந்தார். இதையடுத்து மற்றொரு மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே,” டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாட கூடாது” என எதிர்ப்புத் தெரிவித்தார் .
இந்நிலையில் டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானுடனான ஆட்டத்தை ரத்து செய்ய முடியாது என பிசிசிஐ திட்டவட்டமாக தெரிவித்துள்ளது .இதுகுறித்து பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா கூறும்போது ,”ஜம்மு-காஷ்மீரில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம் .அதோடு தீவிரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் .ஆனால் டி20 உலக கோப்பை போட்டி ஐசிசி-யுடன் , பிசிசிஐ ஒப்பந்தம் செய்துள்ளது .அதோடு போட்டியில் பங்கேற்போம் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது .ஐசிசி-யிடம் அளித்த உறுதிகளை பிசிசிஐ மீற முடியாது “என்றார் .மேலும் எந்த நாட்டு அணியுடன் விளையாட முடியாது என மறுக்க முடியாது . அதோடு ஐசிசி தொடர்பான போட்டிகளில் இந்திய அணி நிச்சயம் பங்குபெறும்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.