சர்வதேச டி20 கிரிக்கெட் தரவரிசைப்பட்டியலில் விராட் கோலி முன்னேற்றம் அடைந்துள்ளார்..
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அவ்வபோது 3 வகையான கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிடுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் தற்போது ஆசிய கோப்பை தொடர் நடந்து முடிந்த நிலையில், டி20 கிரிக்கெட்டுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.. இதில் இந்திய அணி வீரர்கள் சிலர் ஆசியக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டதால் முன்னேற்றம் கண்டுள்ளனர்..
அதில் முக்கியமாக விராட் கோலி முன்னேற்றம் அடைந்துள்ளார்.. ஆம், விராட் கோலி கடந்த சில மாதங்களாக பார்மில் இல்லாமல் இருந்த நிலையில், ஆசிய கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி 5 போட்டிகளில் 2 அரைசதங்கள், 1 சதங்கள் உட்பட 276 ரன்களை குவித்து அசத்தியுள்ளார்.. இதன் காரணமாக டி20 பேட்டிங் தரவரிசையில் 14 இடங்கள் முன்னேறி, தற்போது 15ஆவது இடத்தை பிடித்துள்ளார் விராட் கோலி.. சமீபகாலமாக மிகவும் பின்தங்கி இருந்த கோலி தற்போது 15 வது இடத்திற்கு முன்னேறி இருப்பது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
மேலும் வரக்கூடிய டி20 கிரிக்கெட் போட்டியில் அவர் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் முன்னேற்றம் அடைய அதிக வாய்ப்புள்ளது. அதேபோல ரோஹித் சர்மா 14 வது இடத்திலும், சூர்யகுமார் யாதவ் 4ஆவது இடத்திலும் இருக்கின்றனர்.. அதே சமயம் டி20 கிரிக்கெட்டின் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறார் பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான்..
மேலும் இந்த ஆசியக்கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய புவனேஸ்வர் குமார் டி20 கிரிக்கெட்டின் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் 11வது இடத்திலிருந்து, 7ஆவது இடத்திற்கு முன்னேற்றமடைந்துள்ளார். அதேசமயம் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜோஷ் ஹேசல்வுட் தொடர்ந்து பவுலர்களின் தரவரிசை பட்டியல் முதல் இடத்தில் இருக்கிறார்.
அதேபோல டி20 கிரிக்கெட் போட்டியின் ஆல்ரவுண்டர்கள் தரவரிசை பட்டியலில் வங்கதேசத்தை சேர்ந்த ஷகீப் அல் ஹசன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.. அதற்கடுத்தபடியாக ஆப்கானிஸ்தான் கேப்டன் முகமது நபி இரண்டாவது இடத்தில் உள்ளார்.. மேலும் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா 6ஆவது இடத்தில் உள்ளார்.