Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : இந்தியா அதிர்ச்சி தோல்வி… இறுதிப்போட்டியில் நுழைந்த இங்கிலாந்து.!!

இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்து அணிக்கு  எதிராக இந்தியா அதிர்ச்சி தோல்வியடைந்தது.

டி20 உலக கோப்பை முதல் அரை இறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்குள் சென்றுள்ளது. இந்நிலையில் இரண்டாவது அரையிறுதியில் இன்று ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி மற்றும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஜோஸ் பட்லர் பந்து வீச முடிவு செய்தார்.

அதன்படி இந்திய அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய ராகுல் 5, ரோஹித் சர்மா 27 (28) என அவுட் ஆகிய போதிலும், கோலி, ஹர்திக் பாண்டியா அரைசதத்தால்  இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழந்து 168 ரன்கள் குவித்தது. விராட் கோலி 40 பந்துகளில் 50 ரன்களும், கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய பாண்டியா 33 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்ஸர் உட்பட 63 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஜோர்டன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்களாக ஜாஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் இருவரும் களமிறங்கினர். இந்த ஜோடி ஓவருக்கு பவுண்டரி, சிக்ஸ் என விளாசி தள்ளினர். ஜாஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் இருவரும் விக்கெட் கொடுக்காமல் ஓவருக்கு 10 ரன் என அடித்துக் கொண்டே வந்தனர். கடைசியில் இங்கிலாந்து அணி 16  ஓவரில் விக்கெட் இழப்பின்றி 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக அலெக்ஸ் ஹேல்ஸ் 47 பந்துகளில் (4பவுண்டரி, 7 சிக்ஸர்) 86 ரன்களும், பட்லர் 49 பந்துகளில் (9 பவுண்டரி, 3 சிக்ஸர்) 80 ரன்களும் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தனர். வருகின்ற 13-ஆம் தேதி இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இங்கிலாந்து அணி. இந்திய அணி மிகவும் மோசமாக அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளதால் இந்திய ரசிகர்கள் மிகுந்த சோகத்தில், கவலையில் உள்ளனர்.

 

Categories

Tech |