இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி சிட்னி (SCG) மைதானத்தில் மதியம் 12:30 மணிக்கு தொடங்குகிறது.
8ஆவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியா 8 நகரங்களில் தற்போது விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சம் இல்லாமல் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக தகுதி சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், அதிலிருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டு, தற்போது குரூப் 1 இல் 6 அணிகள் குரூப் 2ல் 6 அணிகள் என மொத்தம் 12 அணிகள் சூப்பர் 12 சுற்றில் விளையாடி வருகின்றன.
இந்நிலையில் இன்றைய போட்டியில் குரூப் 2 பிரிவில் உள்ள இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன இந்தப்போட்டி மதியம் 12:30 மணிக்கு சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இது உலகின் மிகவும் பிரபலமான கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றாகும்.
இந்திய அணி தனது முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தான் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது. அந்த போட்டியில் கோலியின் அதிரடி அரைசதம் (53 பந்துகளில் 82* ரன்கள்) தான் இந்திய அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தது. அதேசமயம் நெதர்லாந்து அணி தனது முதல் போட்டியில் வங்கதேச அணியிடம் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
எனவே கத்துக்குட்டி அணியான நெதர்லாந்த அணி முதல் வெற்றியை பதிவு செய்ய இந்திய அணியுடன் போராடும் என்பதை எதிர்பார்க்கலாம். இந்திய அணியில் விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, அஸ்வின் ஆகியோர் நல்ல பார்மில் இருக்கின்றனர். சூர்யகுமாரும் நல்ல பார்மில் தான் இருக்கிறார். கடந்த போட்டியில் சூர்யா 15 ரன்னில் அவுட் ஆனார். இருப்பினும் வரும் போட்டியில் அவர் அதனை சரிசெய்வார் என்று நம்பலாம்.. ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சொதப்பிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கே எல் ராகுல் இருவரும் இந்த போட்டியில் பார்முக்கு வர வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி வென்றிருந்தாலும் கூட தொடக்க வீரர்களின் ஆட்டம் விமர்சனங்களுக்குள்ளானது.
எல்லா போட்டியிலும் தனி ஒருவரால் போட்டியை கொண்டு செல்ல முடியாது என்று ரசிகர்கள் வெற்றி பெற்றாலும் கூட தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். எனவே தான் ரோஹித், ராகுல் இந்த போட்டியில் அதிரடி தொடக்கத்தை கொடுக்க வேண்டும். பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகியோர் நன்றாக செயல்படுகின்றனர்.. ஆனாலும் கடைசி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டெத் ஓவரில் அர்ஷ்தீப் சிங் சற்று ரன்களை கசிய விட்டார். எனவே அதனை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். இதனையெல்லாம் சரி செய்தால் இந்திய அணி வலுப்பெறும்..
முன்னதாக ரோகித் சர்மா எந்த ஒரு அணியையும் நாங்கள் கற்றுக் குட்டியாக நினைக்க மாட்டோம் என கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது..
டி20 உலகக் கோப்பை : இந்தியாவின் முழுமையான அணி
ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக், விராட் கோலி, புவனேஷ்வர் குமார், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், அக்சர் படேல், ஹர்ஷல் படேல், கேஎல் ராகுல், முகமது ஷமி, ரோஹித் சர்மா (கே), அர்ஷ்தீப் சிங், சூர்யகுமார் யாதவ்.
டி20 உலகக் கோப்பை : நெதர்லாந்தின் முழுமையான அணி
கொலின் அக்கர்மேன், ஷாரிஸ் அஹ்மத், டாம் கூப்பர், பாஸ் டி லீட், ஸ்காட் எட்வர்ட்ஸ் (கே), பிராண்டன் குளோவர், ஃப்ரெட் கிளாசென், ஸ்டீபன் மைபர்க், மேக்ஸ் ஓ’டவுட், டிம் பிரிங்கிள், விக்ரம் சிங், லோகன் வான் பீக், டிம் வான் டெர் குக்டன், ரோலோஃப், வான்டர் மெர்வே பால் வான் மீகெரென்.
ஆனால் போட்டிக்கு முன்னதாக வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதால் சற்று கவலையாக உள்ளது. எவ்வாறாயினும், போட்டியின் போது வானிலை சற்று தெளிவாக இருக்கும் என ஆஸ்திரேலிய வானிலை மையம் கணித்துள்ளது. போட்டியின் போது 24 டிகிரி செல்சியஸ் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே மழை பெய்ய வாய்ப்பு குறைவு என நம்பலாம்..