Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 5 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது அயர்லாந்து…!!

மழை பெய்த காரணத்தால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இங்கிலாந்து அணி 5 ரன்கள் பின்தங்கியதால் அயர்லாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

8ஆவது ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று சூப்பர் 12ல் இன்று இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் மெல்போர்ன் ஸ்டேடியத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பாட்லர் பந்து வீச முடிவு செய்தார். அதன்படி அயர்லாந்து அணியின் தொடக்க வீரர்களாக பால் ஸ்டர்லிங், பால்பிர்னி  இருவரும் களமிறங்கினர். ஒரு ஓவர் முடிந்த நிலையில் தொடக்கத்திலேயே மழை குறுக்கிட்டது. அதன்பின் மீண்டும் சிறிது நேரம் கழித்து போட்டி தொடங்கியது.

இதில் துவக்க வீரர் ஸ்டர்லிங் அதிரடியாக 14(8) ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அதன்பின் பால்பிர்னியுடன் டக்கர் கைகோர்த்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதன்பின் 12ஆவது ஓவரின் கடைசி பந்தில் 27 பந்துகளில் 34 ரன்கள் எடுத்திருந்த டக்கர் துரதிஷ்டவசமாக ரன்னவுட்டானார். 12 ஓவரில் 103/ 2 என ஓரளவிற்கு வலுவாகவே இருந்தது நெதர்லாந்து அணி.

அதன்பின் வந்த ஹாரி டெக்டர் 0 ரன்னில் அவுட் ஆக, சிறப்பாக ஆடி அரை சதம் அடித்த துவக்க வீரர் பால் பிர்னியும்  47 பந்துகளில் (5 பவுண்டரி, 2 சிக்ஸர்) 62 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அதனைத்தொடர்ந்து வந்த கேம்பர் 18, ஜார்ஜ் டோக்ரெல் 0, மார்க் அடேர் 4, மெக்கர்த்தி 3, ஃபியோன் ஹெண்ட் 1, லிட்டில் 0 என சொற்ப ரன்களில் அனைவரும் அடுத்தடுத்து அவுட் ஆனதால் பெரிய ஸ்கோரை அந்த அணியால் எட்ட முடியவில்லை. அயர்லாந்து அணி 19.2 ஓவரில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

கடைசி நேரத்தில் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசியதால் 15 – 20 ரன்கள் குறைவாகவே எடுத்துள்ளது அயர்லாந்து. இங்கிலாந்து அணியில் மார்க் வுட் மற்றும் லிவிங்ஸ்டோன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், சாம் கரன் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

இதையடுத்து இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக களம் இறங்க ஜாஸ் பட்லர் முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார். அதனைத் தொடர்ந்து மற்றொரு துவக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் 3ஆவது ஓவரில் 7 ரன்களில் அவுட் ஆனார். அதனைத் தொடர்ந்து வந்த பென் ஸ்டோக்ஸ் 6 ரன்னில் அவுட் ஆனார். இருப்பினும் இரண்டாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய டேவிட் மலான் ஹாரி புரூக் உடன் ஜோடி சேர்ந்தார்.

இதையடுத்து ஹாரி பரூக் 18 ரன்னில் அவுட் ஆக, டேவிட்  மலனுடன் மொயின் அலி  ஜோடி சேர்ந்தார். பின் மலானும் 35 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். 13.1 ஓவரில் இங்கிலாந்து அணி 86/5 என சற்று தடுமாறி இருந்தது. இதையடுத்து மொயின் அலி அதிரடியாக 12 பந்துகளில் 24* ரன்கள் எடுத்த நிலையில், பதினைந்தாவது ஓவரில் மீண்டும் மழை குறுக்கிட்டதால் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதேபோல லிவிங்ஸ்டனும் ஒரு ரன்னில் அவுட் ஆகாமல் களத்தில் உள்ள நிலையில் இங்கிலாந்து அணி 14.3 ஓவரில் 105/5 ரன்கள் எடுத்திருந்தது.. இதையடுத்து மழை பெய்த காரணத்தால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இங்கிலாந்து அணி 5 ரன்கள் பின்தங்கியதால் அயர்லாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Categories

Tech |