இலங்கை அணி நெதர்லாந்தை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றது.
2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் 9வது தகுதிச்சுற்று போட்டியில் நெதர்லாந்து – இலங்கை அணிகள் இன்று இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு முதல் ஜீலாங்கில் மோதியது.. இப்போட்டியில் காயமடைந்த சமீரா மற்றும் பிரமோத் ஆகியோருக்கு பதிலாக பினுரா மற்றும் லஹிரு குமாரா ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷானகா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக வரும் பதும் நிசாங்கா -குசால் மெண்டிஸ் ஆகியோர் களமிறங்கினர். இதில் பதும் நிசாங்கா 14 ரன்களில் அவுட் ஆனார். அதன்பின் வந்த தனஞ்செய டி சில்வா டக் அவுட் ஆகி வெளியேறிய நிலையில், குசால் மெண்டிஸ் மற்றும் அசலங்கா ஆகியோர் ஜோடி சேர்ந்து பொறுப்பாக விளையாடினர்.
அதன் பின் அசலங்கா 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தபோதிலும், துவக்க வீரர் மெண்டிஸ் அரைசதம் கடந்தார்.. அதனை தொடர்ந்து வந்த பானுக ராஜபக்சே 19, கேப்டன் தசுன் ஷானகா 8 என அவுட் ஆகினர். கடைசி லாஸ்ட் ஓவரில் 44 பந்துகளில் (5 சிக்ஸர், 5 பவுண்டரி) 79 ரன்கள் எடுத்து அதிரடியாக ஆடி வந்த குசால் மெண்டிஸ் அவுட் ஆனார்.. இறுதியில் 20 ஓவர் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட் இழந்து 162 ரன்கள் குவித்தது. வனிந்து ஹசரங்கா 5, கருணாரத்னே 2 ரன்னிலும் அவுட் ஆகாமல் கடைசி வரை இருந்தனர்.. நெதர்லாந்து அணியில் அதிகபட்சமாக பாஸ் டி லீட் மற்றும் பால் வான் மீகெரென் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்..
இதையடுத்து 163 ரன்கள் இலக்கை நோக்கி நெதர்லாந்து அணியின் தொடக்க வீரர்களாக மேக்ஸ் ஓடோவ்ட் மற்றும் விக்ரம்ஜித் சிங் இருவரும் களமிறங்கினர். இதில் விக்ரம்ஜித் சிங் 7 ரன்களில் அவுட் ஆக, அதனை தொடர்ந்து வந்த வீரர்கள் அனைவருமே சீரான இடைவெளியில் விக்கெட்டை விட்டனர். அதன்படி பாஸ் டி லீட் 14, கொலின் அக்கர்மேன் 0, டாம் கூப்பர் 16, ஸ்காட் எட்வர்ட்ஸ் 21, டிம் பிரிங்கிள் 2, ஃப்ரெட் கிளாசென் 3,என ஆட்டம் இழந்த போதிலும் மறுமுனையில் மற்றொரு தொடக்க வீரர் மேக்ஸ் ஓடோவ்ட் மட்டும் அரைசதம் அடித்து தனியாக போராடினார்.
பின் கடைசி 2 ஓரில் வெற்றிக்கு 39 ரன்கள் தேவைப்பட்டபோது, மஹீஷ் தீக்ஷனா வீசிய அந்த ஓவரில் முதல் பந்து நோ பாலாக அமைய மேக்ஸ் ஓடோவ்ட் சிக்ஸர் அடித்தார். அதன் பின் 2 வைட் வீசியதால் ஆட்டத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அந்த ஓவரில் ஒரு சிக்ஸர் அவர் அடிக்க 16 ரன்கள் கிடைத்தது. கடைசி ஓவரில் 23 ரன்கள் தேவைப்பட இலங்கை வேகப்பந்துவீச்சாளர் லஹிரு குமார 6 ரன்கள் மட்டும் கொடுத்தார். இறுதியில் நெதர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் குவித்தது. மேக்ஸ் ஓடோவ்ட் 53 பந்துகளில் (6 பவுண்டரி, 3 சிக்ஸர்) 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அசத்தியது. இலங்கை அணியில் அதிகபட்சமாக ஹசரங்கா 3 விக்கெட்டுக்களை, தீக்ஷனா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.. இதனால் 3 போட்டிகளில் 2 வெற்றிபெற்றுள்ள இலங்கை சூப்பர் 12 இடத்தை உறுதி செய்துள்ளது.
https://twitter.com/T20WorldCup2024/status/1583001081650774022